12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: முதல் நாளில் 32,674 மாணவர்கள் ஆப்சென்ட்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் நாளான இன்று 32,674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-05-05 13:35 GMT
சென்னை,

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. மொத்தம் 3,119 மையங்களில் பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவார்கள்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில், 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சந்திக்காத மாணவர்கள் தான் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். இதனிடையே தேர்வு பயம் காரணமாக சேலத்தில் 2 மாணவர்கள், மதுரையில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் பொதுத்தேர்வின் முதல் நாளான இன்று 32,674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். உடல்நிலை பாதிப்பு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகும்.

ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வின் முதல் நாளிலேயே 32,674 மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருந்துள்ள நிலையில், இனி வரும் தேர்வுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்குமா?, தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லையா? என்பன போன்ற கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்று நடைபெற்ற தேர்வில் எந்த வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என தேர்வுத்துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்