கிரிப்டோகரன்சி மோசடி - தமிழக போலீசாரிடம் கோடிகளில் கொள்ளையடித்த கும்பல்
கிரிப்டோ கரன்சி மோசடியில் 2 காவலர்கள் சுமார் ரூ.1.5 கோடி இழந்துள்ளனர்.
சென்னை,
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், காவல் துறையில் பணியாற்றுபவர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் அதிக அளவு பணத்தை இழந்த வேதனையில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கெனவே அறிவித்து இருந்தேன்.
இந்த நிலையில், புதுவகையான மோசடியில் காவல் துறையை சேர்ந்த இருவர் மற்றும் அவரை சார்ந்தவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் கிரிப்டோகரன்சி மோசடியில் ஒன்றரை கோடி ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த இரு காவலர்களும் வாட்ஸ் அப் போன்று செயல்படக்கூடிய டெலிகிராம் என்ற செயலியில் கிரிப்டோகரன்சி பற்றி தெரிந்துகொள்ளக்கூடிய குழு இருந்ததை கண்டுள்ளனர். அதில், கானப்படும் நிறுவனத்தில் சிறிய அளவில் முதலீடு செய்தால், அதிக அளவில் லாபம் பெறலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பி ஒன்றரை கோடி ரூபாய் முதலீடு செய்து தற்போது ஏமாந்துள்ளனர் என்ற விவகாரம் தற்போது காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.
எனவே குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்று சமூக வலைதளங்கள் மூலம் கவர்ந்திழுக்கும் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்பி ஏமாறாமல் எச்சரிக்கையாக இருப்பதற்காக இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.