பட்டினப் பிரவேச நிகழ்ச்சி மீதான தடையை திரும்ப பெற வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-05-05 10:30 GMT
சென்னை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இதனிடையே பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பின. 

தமிழக சட்டசபை வரை இந்த விவகாரம் எதிரொலித்தது. இது குறித்து சட்டசபையில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தருமபுரம் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள் என்றும் தருமபுர பட்டின பிரவேச விவகாரத்தில் தமிழக அரசு நடுநிலையோடு செயல்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், தருமபுரம் ஆதினத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, மின்சாரம் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களை திசை திருப்பதாகவே இந்த விவகாரம் பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்