இஸ்லாமியர் வீட்டிற்கு அக்னி சட்டி எடுத்து செல்லும் பூசாரிகளுக்கு மரியாதை...!
தேனி அருகே இஸ்லாமியர் வீட்டிற்கு அக்னி சட்டி எடுத்து சென்ற பூசாரிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
கம்பம்,
தேனி மாவட்டம் கம்பத்தில் கவுமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னிச்சட்டி ,கரகம் ஆயிரங்கண் பானை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதேபோல் கவுமாரியம்மன் கோவில் பூசாரிகள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி இன்று கோவில் பூசாரிகள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது சின்னமலு கர்ணன் தெருவில் உள்ள இஸ்லாமியர் வீட்டிற்குள் சென்றனர். அவர்களும் வீட்டிற்கு வந்த பக்தர்களுக்கு மரியாதை செலுத்தினர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து கோவில் பூசாரிகள் கூறியதாவது,
கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கோவில் பூசாரிகள் அக்னி சட்டி எடுத்து பல்வேறு சமுதாய தெருக்கள் வழியாக ஊர்வலமாக வரும்போது பூசாரிகளுக்கு மாலை, குளிர்பானங்கள் வழங்குவார்கள். அதே போல் இஸ்லாமிய நாட்டாண்மை குடும்பத்தை சேர்ந்த வம்சாவழியினர் பூசாரிகளை வரவேற்று மரியாதை செலுத்துவது வழக்கம்.
மத ஒற்றுமைக்காக பல தலைமுறைகளாக மரியாதை செலுத்தி வருவதால், இந்த ஆண்டும் பூசாரிகள் இஸ்லாமிய நாட்டாண்மை வீட்டிற்கு சென்றுபோது அங்கு பூசாரிகளுக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத ஒற்றுமைக்காக கோவில் பூசாரிகள் அக்னி சட்டி எடுத்து இஸ்லாமியர் வீட்டிற்கு சென்று வருவது கம்பம் பகுதியில் பொதுமக்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.