வீடியோ கால் மூலம் கொலை - கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
சென்னை,
சென்னை போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த சித்திரவதையை வெளியே சொன்னதால் ராஜ் என்பவரை கொலை செய்தோம். உரிமையாளாரான கார்த்திக்கேயன் லோகேஸ்வரி விடியோ கால் மூலம் பேசி ராஜை அடித்துக் கொலை செய்ய உத்தரவிட்டனர். அதன் படியே நாங்கள் ராஜை கொலை செய்தோம். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்தவர்களிடம் ரூ.20 ஆயிரம் கட்டணம் வசூல் செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களையே பணியில் அமர்த்தியதும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுவாழ்வு மையம் நடத்திய உரிமையாளர் கார்த்திகேயன் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதாகவும், முன்னாள் மாநகராட்சி ஊழியர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வழக்கின் முழு விவரம்:-
சென்னை ராயப்பேட்டை பெரியார் திடல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது 45). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ராஜ், ஆட்டோவுக்கு மேற்கூரை (ரீப்பர்) அமைக்கும் பணி செய்து வந்தார். இவர் மதுபோதைக்கு அடிமையானார். எனவே அவரை அவரது குடும்பத்தினர் சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள மெட்ராஸ் கேர் மறுவாழ்வு மையம் என்ற போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தனர்.
இந்த மையத்தில் 3 மாதங்கள் தங்கி சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் ராஜ் வீடு திரும்பினார். அவர் இனிமேல் மது அருந்த மாட்டார் என்று அவரது குடும்பத்தினர் நம்பியிருந்தனர். ஆனால் வெளியே வந்தவுடனே மீண்டும் மதுபானத்தை கையில் எடுத்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ராஜீன் உறவினர்கள் போதை மறுவாழ்வு மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த மையத்தின் ஊழியர்கள் வீட்டுக்கு வந்து ராஜை அழைத்து சென்றனர்.
இந்தநிலையில் ராஜ் இறந்து விட்டதாக போதை மறுவாழ்வு மையத்தினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராஜீன் மனைவி கலா மற்றும் உறவினர்கள் மறுவாழ்வு மையத்துக்கு சென்றனர். அப்போது ராஜ் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கலா, சென்னை அண்ணாசாலை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், `தன்னுடைய கணவர் சாவில் மர்மம் இருக்கிறது. அவரை போதை மறுவாழ்வு ஊழியர்கள் தான் அடித்துக் கொன்று விட்டனர்’ என்று குற்றம் சாட்டினார். இந்த புகாரின் பேரில் முதலில் சந்தேக மரணம் என்ற கோணத்தில் அண்ணாசாலை போலீசார் விசாரணையை கையில் எடுத்தனர்.
விசாரணை முடிவில் ராஜ் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த மறுவாழ்வு மையம் அரசின் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து, அந்த மையத்தின் மேலாளரான பெரம்பூரைச் சேர்ந்த மோகன் (34), ஊழியர்கள் ஓட்டேரி கொசப்பேட்டை யுவராஜ் (26), பாரிமுனை செல்வமணி (36), சூளை சதீஷ் (29), ராயப்பேட்டை கேசவன் (42), நெற்குன்றம் பார்த்தசாரதி (23), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சரவணன் (48) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.