கோத்தகிரியில் ஆண் யானை அரசு பஸ்சை வழிமறித்ததால் பரபரப்பு..!

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் வாகனங்களை மறித்து ஆண் காட்டு யானை அட்டகாசம் செய்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-05-04 08:33 GMT
கோத்தகிரி:

கோடைக்காலம் தற்போது துவங்கியுள்ளதால் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளது. 

மேலும் வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி சமவெளிப் பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குஞ்சப்பனை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பலா மரங்களில் உள்ள பலாக் காய்களை உண்பதற்காக குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வந்து முகாமிட்டுள்ளன. 

இவ்வாறு வந்த யானைகள் குட்டிகளுடனும், தனியாகவும் அவ்வப்போது கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உலா வந்த வண்ணம் உள்ளன. மேலும் அவ்வாறு வரும் யானைகள் அந்த சாலையில் செல்லும் அரசு பஸ் மற்றும் வாகனங்களை மறித்து சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு கோத்தகிரியிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் அரசு பஸ் முள்ளூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது சாலையின் குறுக்கே காட்டு ஆண் யானை ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. யானையைக் கண்ட பஸ் டிரைவர் சற்று தொலைவிலேயே பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தினார். 

ஆனால் பஸ்சைக் கண்டு மிரண்ட ஆண் யானை ஓடி வந்து பஸ்சின் கண்ணாடியைத் தாக்க முயற்சி செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பயத்தால் அலறினர். பின்னர் யானை டிரைவர் இருக்கைக்கு அருகில் சென்று அங்கிருந்த கண்ணாடியை உடைக்க முயன்றது. 
உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகளில் சிலர் பஸ்சுக்குள் இருந்தவாறே, பலத்த சத்தம் எழுப்பி யானையை விரட்ட முயற்சி செய்தனர். சற்று நேரம் பஸ்ஸின் அருகே நின்றுக் கொண்டிருந்த காட்டு யானை மீண்டும் சாலையின் நடுவே சென்று நின்றுக் கொண்டது. 

கோத்தகிரி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், அந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. வாகன ஓட்டிகள் யானை தங்களுக்கு அருகே வராமலிருக்க சாலையின் இருபுறமும் தீயிட்டனர். 

மேலும் தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலையின் குறுக்கே நின்றுக் கொண்டிருந்ததால் சுமார் 3 மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் யானை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது. அதற்கு பின்னரே வாகனங்கள் அங்கிருந்து ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன.

இது குறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் குஞ்சப்பனை சுற்று வட்டாரப் பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கும் சமயத்தில் இந்த சாலையில் காட்டு யானைகள் வாகனங்களைத் தாக்கி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே காற்று யானைகள் சாலைக்கு வராத வகையில் அகழி வெட்டவோ அல்லது கம்பித் தடுப்புகள் அமைக்கவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்