நெல்லை: போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் நகை பறிப்பு - சிறுவன் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!
ஏர்வாடி அருகே போலீசார் போல் நடித்து பேராசிரியரிடம் தங்க செயினை பறித்த சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் மகன் ஹரிகேசவன் (30). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவில் இவர் மாத்திரை வாங்குவதற்காக சிறுமளஞ்சியில் இருந்து ஏர்வாடிக்கு தனது பைக்கில் சென்றார். ஏர்வாடி-சிறுமளஞ்சி திருப்பத்தில் திரும்பிய போது சிறுவன் ஒருவன் லிப்ட் கேட்டுள்ளான். ஹரிகேசவனும் அவனை பைக்கில் ஏற்றினார்.
அப்போது அந்த சிறுவன் தான் 11ம் வகுப்பு படிப்பதாகவும், அணைக்கரை செல்லும் ரோட்டில் இறக்கி விடும்படி கூறி உள்ளான். இதனை நம்பிய ஹரிகேசவனும் சிறுவனுடன் அணைக்கரை ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
சீனிவாசகபுரம் அருகே சென்ற போது மற்றொரு பைக்கில் வந்த 3 பேர் அவரது பைக்கை வழிமறித்து கஞ்சா விற்பனை செய்யும் பையனுடன் உனக்கு என்ன பேச்சு எனக் கேட்டதுடன் போலீசார் போல் நடித்து, உன்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி அங்குள்ள மண்பாதையில் அழைத்து சென்றனர்.
அதன் பின் 4 பேரும் ஹரிகேசவன் தலையில் கைகளால் தாக்கி, அவதூறாக பேசி, அவர் அணிருந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ 40 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து ஹரிகேசவன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேராசிரியரிடம் தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.