மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை,
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பின்போது இப்போகிரெடிக் உறுதிமொழிக்குப் பதிலாக மகரிஷி சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி வாசிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து தவறுதலாக உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இது ஒருபுறமிருக்க, இந்த சம்பவத்தின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து, துறை ரீதியாக விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம் மருத்துவ கல்வி இயக்குனரகத்தை சேர்ந்த சிறப்பு குழு ஒன்று மதுரை மருத்துவ கல்லூரிக்கு வந்தது. அந்த குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே உறுதிமொழி ஏற்பு விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு நேரில் விசாரணை நடத்துவதற்காக நேற்று வந்தார். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட டீன் ரத்தினவேல், தற்போதைய பொறுப்பு டீன் தனலட்சுமி, மாணவர் அமைப்பு தலைவர் ஜோதிஸ் குமாரவேல் உள்ளிட்டோரிடம், மதுரை மருத்துவ கல்லூரி டீன் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக ரத்னவேல் நீடிப்பார் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு ரத்னவேல் மாற்றப்பட்ட நிலையில் சட்டசபையில் அமைச்சர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.