தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம் மதுரை ஆதீனம் பேட்டி

தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி அளித்தார்.

Update: 2022-05-03 20:01 GMT
மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மதுரை ஆதீன மடம் உள்ளது.

மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீன மடம் பழமையான சைவ பீடம் ஆகும். அங்கு மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார், ஆதீனமாக உள்ளார். அந்த மடத்தில் பட்டின பிரவேசம் என்பது 500 ஆண்டு காலம் பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வு. அப்போது தருமபுரம் ஆதீனத்தை வெள்ளிப் பல்லக்கில் தூக்கிச்செல்வார்கள்.

இந்த நிலையில் தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்தது, எங்களை போன்ற சைவ மட ஆதீன கர்த்தர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

பட்டினப்பிரவேசம்

தமிழக அரசு, பட்டின பிரவேசம் விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கருப்புக்கொடி போராட்டத்தையும் மீறி தமிழக கவர்னர், தருமபுரம் ஆதீன மடத்துக்கு சென்றார். எனவே தமிழக அரசு ஆத்திரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாகவே தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று நினைக்கிறேன்.

எனது உயிரை கொடுத்தாவது...

தருமபுரம் ஆதீன மட பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் நிச்சயமாக கலந்து கொள்வேன். அப்போது பல்லக்கு தூக்க எவரும் வரவில்லை என்றால், நானே களம் இறங்குவேன். வெள்ளிப் பல்லக்கை நானே தூக்குவேன். இந்த வகையில் என் உயிரே போனாலும் கவலைப்பட மாட்டேன். எனது குருவான தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம்.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி, காங்கிரஸ் ஆட்சியின்போது இந்த நிகழ்ச்சி நடந்தது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கூட இது நடந்தது. இதற்கு இப்போது ஏன் தடை விதிக்க வேண்டும்? தமிழக முதல்-அமைச்சர் ரகசிய காப்பு பிரமாணம் எடுக்கிறார். அதை எடுக்கக்கூடாது என்று எவரும் சொல்ல முடியாது. அது போலத்தான் இந்த நிகழ்ச்சியும்.

குரு-சிஷ்யர்கள்

திருஞானசம்பந்தர் பல்லக்கை திருநாவுக்கரசர் சுமந்துள்ளார். எனவே பட்டின பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுர ஆதீனம் மற்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடக்கும்.

அரசு உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் சொல்வேன். நான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடியவன். அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு அல்ல. சிலர் எதிர்ப்பதற்காக பாரம்பரிய நிகழ்வை எப்படி தடை செய்யலாம்? என்னை வேண்டுமானால் சுட்டு கொல்லட்டும். மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை. இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச் செல்லும் நிகழ்வு.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்