புதுக்கோட்டையில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி உள்பட 2 பேர் பலி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்
புதுக்கோட்டையில் கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயியான முருகேசன் (38), வீரமணி (40) உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை:
விவசாயி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). விவசாயியான இவர் பொக்லைன் எந்திரம், லாரி ஆகியவை வைத்துள்ளார். நார்த்தாமலை அருகே உள்ள சித்துப்பட்டியை சேர்ந்தவர் வீரமணி (40). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இந்த நிலையில் முருகேசனும், வீரமணியும் இன்று மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி நோக்கி சென்றனர்.
புதிதாக பொக்லைன் எந்திரம் வாங்குவது தொடர்பாக முருகேசன், வீரமணியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் புதுக்கோட்டை அசோக்நகரில் ஆலங்குடி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு கார் வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் கார் சாலையோரம் கவிழ்ந்தது.
2 பேர் பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வீரமணி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அதேநேரத்தில் காரில் இருந்த ஒரு தம்பதி, 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர். டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது. இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கணேஷ்நகர் போலீசாரும் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வீரமணி இன்று மதியம் இறந்தார். படுகாயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் வேலைக்காக...
காரில் பயணம் செய்தவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியை சேர்ந்த கோகுல செல்வன் (42), அவரது மனைவி செல்வி (32) மற்றும் அவர்களது 2 குழந்தைகள் என்பதும், காரை ஓட்டிவந்தவர் சத்தியராஜ் (33) என்பதும் தெரியவந்தது. இதில் கோகுல செல்வனும், சத்தியராஜ் ஆகிய இருவரும் உறவினர்கள் ஆவார்கள்.
கோகுல செல்வன் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு காரில் குடும்பத்துடன் பயணம் செய்திருக்கிறார். இந்த நிலையில் தான் புதுக்கோட்டை அசோக்நகரில் கார் வந்த போது விபத்துக்குள்ளானது என போலீசார் தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
புதுக்கோட்டையில் கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் கார் கவிழ்ந்த போது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரில் சிக்கியவர்களும் அபய குரல் எழுப்பினர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான காரையும், மோட்டார் சைக்கிளையும் மீட்டு போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.
இந்த விபத்து குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோகுல செல்வன் எந்த நாடு செல்ல இருந்தார் என்பது பற்றி விவரம் தெரியவில்லை. விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருவருக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.