தேசிய கல்வி கொள்கையால் கர்நாடகத்தில் கல்வியில் மாற்றம் ஏற்படும்- பசவராஜ் பொம்மை தகவல்
தேசிய கல்வி கொள்கையால் கர்நாடகத்தில் இனி மழலையர் பள்ளி முதல் கல்லூரி கல்வி வரை மாற்றம் ஏற்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நடைபெற்ற நிருபதுங்கா பல்கலைக்கழக தொடக்க விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு பேசியதாவது:-
வேலை வாய்ப்பு கொள்கை
இது மாற்றத்திற்கான காலம். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 46 சதவீதம் இருக்கும் இளைஞர்கள் நாட்டின் சொத்து என்று கருதப்படுகிறது. இளைஞர்களுக்கு கல்வி, வேலை வழங்குவது அரசின் அடிப்படை நோக்கம் ஆகும். சுயதொழிலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கர்நாடகத்தில் தனியாக ஒரு வேலை வாய்ப்பு கொள்கையை வகுத்துள்ளோம்.
இந்த நிருபதுங்கா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள தேவையான நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்யும். காலத்திற்கு ஏற்றார்போல் மாறாவிட்டால் நமக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போகும். அதனால் தான் கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளோம். மழலையர் பள்ளிகள் முதல் கல்லூரி கல்வி வரை இனி மாற்றம் ஏற்படும். இந்த நிருபதுங்கா பல்கலைக்கழகம் தேசிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்தியுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
புதிய இந்தியா
விழாவில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பேசுகையில், "புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் கர்நாடகம் தனது பங்களிப்பை அளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 6 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் இன்னும் 7 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. ஒரு மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்படும்" என்றார்.
மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீண்சூட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.