ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் பகுதியில் தற்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.;
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. இங்கு தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள். மேலும் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றைக் காண, சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதையடுத்து ஒகேனக்கல் பகுதியில் தற்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.