சென்னை ஐகோர்ட்டு அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்

சென்னை ஐகோர்ட்டு அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக்கோரும் புதிய தீர்மானத்தை சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-05-01 19:56 GMT
சென்னை,

இந்தியாவின் கோர்ட்டுகளில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். அதற்கான நேரம் வந்துவிட்டதாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரமணாவும் தெரிவித்திருக்கிறார். இருவரது கருத்துகளும் வரவேற்கத்தக்கவை.

இந்த மாற்றத்தின் காரணமாக சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக அன்னைத்தமிழ் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. சென்னை ஐகோர்ட்டின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை பா.ம.க.வும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

இத்தகைய சூழலில்தான் பாலைவனப் பயணத்தின்போது தென்படும் சோலைவனத்தைப் போல, கோர்ட்டு விசாரணைகளை உள்ளூர் மொழிகளில் நடத்த வேண்டும் என்று பிரதமரும், தலைமை நீதிபதியும் ஒரே நேரத்தில், ஒரே நிகழ்வில் கூறியிருப்பது சாதகமான திருப்பம் ஆகும். இதைப் பயன்படுத்திக்கொண்டு சென்னை ஐகோர்ட்டின் வழக்காடும் மொழியாக தமிழ் அறிவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக்கோரி 15 ஆண்டுகளுக்கு முன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. எனவே, தமிழை சென்னை ஐகோர்ட்டு அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் புதிய தீர்மானத்தை தமிழக சட்டசபையின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்