கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
கிராம சபை கூட்டம்
மே தினத்தையொட்டி கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடத்த உள்ளாட்சித்துறை உத்தரவிட்டிருந்தது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு கிராம வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கிராம பஞ்சாயத்துகளில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் தலைமையில் இன்று காலை கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மணவெளி தொகுதி ஓடைவெளி கிராம பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் நாகராஜன் வரவேற்றார். சபாநாயகர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
சபாநாயகர் உத்தரவு
இந்தகூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்காதது குறித்து சபாநாயகரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையர் ரமேசுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்காத இந்த கூட்டத்தை புறக்கணிக்க போவதாகவும் சபாநாயகர் செல்வம் பொதுமக்களிடம் தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அரியாங்குப்பம் கிழக்கு பஞ்சாயத்தில் நடந்த கூட்டத்துக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மேலாளர் வீரம்மாள், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களிடன் குறைகளை கேட்டறிந்தார். கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ளாத அரசு துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பாகூர்
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 14 இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நெட்டப்பாக்கம் கொம்யூன்
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட 11 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஏரிப்பாக்கம் கிராமத்தில் நடந்த கூட்டத்துக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலர் பிரபாகரன் மற்றும் ஏரிப்பாக்கம், நத்தமேடு கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று ஏரிப்பாக்கத்தில் பாழடைந்த சமுதாய நலக்கூடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகம் மற்றும் நத்தமேடு சுடுகாட்டு பகுதியை ஆணையர் ஜெயக்குமார் பார்வையிட்டு, குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மண்ணாடிப்பட்டு
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சுத்துக்கேணியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்த அதிகாரிகள், கிராமத்துக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திருபுவனை பஞ்சாயத்தில் நடந்த கூட்டத்தில் அங்காளன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.