சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'மதுரை மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியின் போது ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த இந்நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!
கிரேக்க மருத்துவ அறிஞர் ஹிப்போகிரட்டீஸ் நோயாளிகள் அனைவருக்கும் நம்பிக்கையளித்து, மருத்துவம் அளிக்க வேண்டும்; நல்லறிவு, இரக்கம், அன்பு, நேர்மை ஆகிய பண்புகளை மருத்துவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றார். அதுவே உலகம் முழுவதும் மருத்துவ மாணவர்களால் உறுதிமொழியாக ஏற்கப்படுகிறது!
இந்திய ஆயுர்வேத அறிஞர் சரகரின் தத்துவம் என்பது மன்னரால் வெறுக்கப்படுவோருக்கோ, மன்னரை வெறுப்போருக்கோ மருத்துவம் அளிக்கக்கூடாது; கணவர் இல்லாமல் மனைவிக்கு மருத்துவம் அளிக்கக் கூடாது என்பதாகும். இந்த பிற்போக்குத் தத்துவம் மருத்துவர்களின் உறுதிமொழியாக இருக்கக்கூடாது!
சரகர் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்பதை தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரையாக மட்டுமே வழங்கியுள்ள நிலையில், அதை மாணவர்களை ஏற்கச் செய்தது தவறு. இது மருத்துவ மாணவர்களின் மனதில் பிற்போக்குத் தனத்தை ஏற்படுத்தும். இது மருத்துவத்துறைக்கு நல்லதல்ல!
சரகர் உறுதிமொழியை, தங்களுக்குத் தெரியாமல், மாணவர்களே ஏற்றுக்கொண்டதாக கல்லூரி நிர்வாகம் கூறுவது தவறு; அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் யார்? என்பதை விசாரித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!' என்று கூறியுள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியின் போது ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த இந்நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!(1/5)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 1, 2022