சித்திரை மாத சர்வஅமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்..!
சித்திரை மாதத்தின் சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.
ராமேஸ்வரம்:
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே பக்தர்களின் கூட்டம் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் சித்திரை மாதத்தில் சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட இன்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.
இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் அமர்ந்து இறந்துபோன தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய திதி,தர்ப்பணம் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராட கோவிலின் தெற்கு ரதவீதி கோபுர வாசல் பகுதியில் இருந்து கிழக்கு ரதவீதி வரையிலும் நீண்ட வரிசையில் நின்று தீர்த்தம் ஆடினர்.
இதேபோல் கோவிலில் உள்ள சாமியை தரிசனம் செய்யவும் முதல் பிரகாரத்தில் பக்தர்கள் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதால் ராமேஸ்வரம் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலில் ரத வீதி சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் ஹோட்டல், டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்கமாக தை மற்றும் ஆடி அமாவாசை புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் தான் இது போன்று பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால் முதல் முறையாக சித்திரை மாதத்தின் சர்வ அமாவாசையான இன்று ராமேஸ்வரம் கோவிலில் இதுவரை இல்லாத அளவிற்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.