திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2.33 கோடி..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏப்ரல் மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.2.33 கோடி கிடைத்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதந்தோறும் இரு முறை உண்டியல் எண்ணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மாதத்தில் முதல் முறை கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டது. 2-வது முறையாக இன்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமணம் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
கோவில் இணை ஆணையர்(பொறுப்பு) குமரதுரை தலைமையில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்ட உண்டியல்களில் இருந்து ரூ.1 கோடியே 47 லட்சத்து 90 ஆயிரத்து 943 கிடைத்தது.
இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், இதன் உப கோவில்களான திருச்செந்தூர் சிவன் கோவில், நாசரேத் கோவில், கிருஷ்ணாபுரம் கோவில், குலசேகரன்பட்டினம் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில் ரூ.85 லட்சத்து 41 ஆயிரத்து 896 கிடைத்துள்ளது. ஆக மொத்தத்தில் இந்த மாதம் மட்டும் ரூ. 2 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 839 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இந்த மாதம் மொத்தத்தில் தங்கம் 1,925 கிராமும், வெள்ளி 51 ஆயிரத்து 65 கிராமும், 62 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.