சத்துணவுடன் முட்டை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்

செங்குணம் அரசு பள்ளியில் சத்துணவுடன் முட்டை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2022-04-28 17:36 GMT
குன்னம், 
அரசு பள்ளி
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமம் அண்ணா நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 51 மாணவர்களும், 36 மாணவிகளும் பயின்று வருகின்றனர். பள்ளியில் வழக்கம் போல் இன்று மதியம் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. 
முட்டையுடன் வழங்கப்பட்ட சத்துணவினை 73 மாணவ-மாணவிகள் சாப்பிட்டனர். மாலையில் பள்ளி முடிந்து அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் இருந்த பள்ளி மாணவ-மாணவிகளில் 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 
அரசு மருத்துவமனையில் சிகிச்சை
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் அந்த குழந்தைகளை அழைத்து கொண்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சத்துணவில் வழங்கப்பட்ட முட்டை நாள்பட்டவையாக இருக்கலாம் என்றும், அதனால்  தான் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக அவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டினர். மயக்கம் அடைந்த 9 மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:-
4-ம் வகுப்பு படிக்கும் ராபின், சேகுவாரா, யாத்திரன், ஜீவா, இன்பா, 3-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீவித்யா, சூரியபிரகாஷ், சிவானி, 1-ம் வகுப்பு படிக்கும் நிவேணா.
விசாரணை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகளை கலெக்டர் உத்தரவின் பேரில், பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி பார்வையிட்டு நலம் விசாரித்தார். மேலும் அந்த பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மற்ற மாணவ-மாணவிகளுக்கு கிராமத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) அருள்செல்வி, சத்துணவு அமைப்பாளர் சுதா, உதவியாளர் பிரபாவதி ஆகியோரிடம் மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்