கோவிலில் உண்டியல் திருடிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
மரக்காணம் அருகே கோவிலில் உண்டியல் திருடிய சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு பகுதியில் நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்களை கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில், மரக்காணம் அருகே தேவிகுளம் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் நள்ளிரவில் உண்டியலை தூக்கிச்சென்று, அதில் இருந்த பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் நாவற் குளத்தை சேர்ந்த முத்துக்குமரன் (வயது 20) மற்றும் சின்னகோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த 17 மற்றும் 15 வயதான அண்ணன், தம்பிகள் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சிறுவர்கள் 2 பேரும் செஞ்சியில் உள்ள சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டனர். முத்துக்குமரன் திண்டிவனம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.