வீடு புகுந்து 18 பவுன் நகை திருடிய பெண் கைது
முத்தியால்பேட்டையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருடிய பெணை போலீசுார் கைது செய்தனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி அனிதா (வயது 38). சேதராப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று அனிதா தனது 18 பவுன் நகைகளை பீரோவில் வைத்திருந்தார். பீரோ சாவியை வீட்டில் மறைவான இடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார்.
பின்னர் வேலை முடித்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நகை காணமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அனிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின் பேரில் வீட்டின் மாடியில் வசித்த திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் 18 பவுன் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசுார் கைது செய்தனர். மேலும் நகையையும் பறிமுதல் செய்தனர்.