சாலையில் சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - போலீசார் விசாரணை...!

கோத்தகிரி அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்த எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-04-27 16:00 GMT
கோத்தகிரி,

கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மதன் தாந்தி(44). இவர் மற்றும் அராக் சந்த்(60), நீரஜ் குமார்(30) ஆகியோர் கோத்தகிரியில் உள்ள ஒரு வீட்டில் டைல்ஸ் பதிக்கும் பணியை முடித்து விட்டு இன்று இரவு 7 மணிக்கு கோவை செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.

காரை மதன் தாந்தி ஒட்டியுள்ளார். கார் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கைத்தளா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருக்கும் போது காரின் முன் பகுதியிலிருந்து புகைவந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காரை சாலையில் நிறுத்திவிட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். பின்னர் காரில் பற்றிய தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதைக்கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கோத்தகிரி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பாய்ச்சி அடித்து காரில் பற்றிய தீயை அணைத்தனர்.

ஆனால் தீ விபதிற்குள்ளான கார் முற்றிலும் எரிந்து நாசமானது. சாலையின் நடுவே காரில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து தடைபட்டதால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன. 

தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட  பின் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். காரில் தீப்பற்றியவுடன் உடனடியாக காரில் இருந்த 3 பேரும் காரை விட்டு இறங்கியதால் காரில் சென்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்