தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்படுமா? - அமைச்சர் பொன்முடி விளக்கம்

ஏழை மாணவர்கள் பலர் தொலைதூர வழியில் கல்வி பயின்று, ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்குச் சென்றனர்.

Update: 2022-04-27 10:03 GMT
சென்னை,

தமிழக சட்டப்பேரவை இன்று காலை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பேசும்போது, “கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு யுஜிசி விதிகளின்படி, ஸ்லெட், நெட் அல்லது பி.எச்டி படித்திருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதன்படி ஏழை மாணவர்கள் பலர் தொலைதூர வழியில் கல்வி பயின்று,  ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்குச் சென்றனர். 

இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தொலைதூரக் கல்வி மூலம் படித்தது செல்லாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளை 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு முன்பாக தொலைதூரக் கல்வி மூலம் படித்து ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை வழங்க அரசு முன்வருமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "ஸ்லெட், நெட் தேர்வெல்லாம் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தொடர்புடையது. யுஜிசிக்குத்தான் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் எல்லாம் உள்ளது. அவர்கள்தான் ஸ்லெட், நெட் தேர்வுகளை எல்லாம் நடத்துகின்றனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக் கல்வி படிப்புகளை அங்கீகரிக்குமாறு தமிழக அரசு யுஜிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது.

படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் எல்லாம் இந்த தொலைதூரக் கல்வியின் வாயிலாக படிப்பைத் தொடர்வதற்கு அதில் வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தினால்தான் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இந்த தொலைதூரக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது என்பதே உண்மை.

தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்களுக்கு தேவையானதாக கூறப்பட்டுள்ள தகுதிகளை அரசும் ஏற்றுக்கொண்டு, இதுதொடர்பாக யுஜிசிக்கு எழுதலாம். அதேபோல், தற்போது கவுரவ விரிவுரையாளர்களாக இருக்கின்ற பலர் ஸ்லெட்,நெட் தேர்ச்சிப் பெற்றும் உள்ளனர். 

எனவே அது தொடர்பாகவும் பரிசீலித்து, இந்த பணிகளிலே நியமிப்பது பற்றி  அரசு ஆலோசித்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்த அரசு வருங்காலங்களில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்" என்று அவர் கூறினார்.

இதன்மூலம், தொலைதூரக் கல்வி மூலம் படித்து ஸ்லெட்,நெட் தேர்வுகளில் வென்றவர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு,  “வருங்காலங்களில் தமிழக அரசு அதற்கான ஏற்பாடுகளை நிச்சயமாக செய்யும்” என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார். 

மேலும் செய்திகள்