கோவில் திருவிழாவில் 200 ஆடுகள் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம்

பழனி அருகே நடந்த கோவில் திருவிழாவில், 200 ஆடுகள் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2022-04-26 21:04 GMT
பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கோம்பைபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியதுரையான் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது.

200 ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடன்

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கிடாவெட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை முதல் கருப்பண்ணசாமி சன்னதி முன்பு ஆடுகள் வெட்டும் நிகழ்ச்சி தொடங்கியது.

சாமிக்கு வேண்டுதல் செய்த பக்தர்கள், அடுத்தடுத்து ஆடுகளை கொண்டு வந்து ஒப்படைத்தனர். அவை ஒன்றன்பின் ஒன்றாக வெட்டப்பட்டன. அதன்படி 200 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் கோழிகளையும் பக்தர்கள் பலியிட்டனர்.

இதைத்தொடர்ந்து அருகிலேயே ஆடுகள் உரிக்கப்பட்டு இறைச்சியாக்கப்பட்டது. கோழி இறைச்சியும் தயாரானது. அதன்பிறகு கோவில் வளாகத்திலேயே சமையல் செய்யும் பணி நடந்தது.

அன்னதானம்

இதேபோல் அங்கு அரிசி சாதம் சமைக்கப்பட்டு மலைபோல் குவித்து வைக்கப்பட்டது. ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி குழம்பும் தயாரானது. இதைத்தொடர்ந்த மதியம் அன்னதானம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து சாப்பிட்டனர். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்