என் ஆர் காங்கிரஸ் பா ஜ க கூட்டணி ஆட்சியில் புதுச்சேரியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை அமித்ஷாவுக்கு நாராயணசாமி கடிதம்

என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் புதுவையில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-04-25 14:53 GMT
புதுச்சேரி
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் புதுவையில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பணிகள் நடக்கவில்லை

புதுவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் நீங்கள் பேசும்போது, என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு அமைந்தால் புதுவை மாநிலத்துக்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டுவருவோம் என்றீர்கள். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவோம் என்றார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
புதுவையில் புதிய அரசு அமைந்து ஒராண்டு ஆன நிலையிலும் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. புதுவை அரசுக்கு 1.6 சதவீதம் தான் கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய நிதிக்குழுவின் விதிப்படி 41 சதவீத நிதி வழங்கப்பட வேண்டும்.

22 சதவீத நிதி

புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. மேலும் புதுவையை மத்திய நிதிக்குழுவில் இணைக்கவேண்டும், மாநிலத்தின் கடன்தொகை ரூ.8 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யவேண்டும், ரூ.2 ஆயிரம் கோடியை வளர்ச்சி பணிகளுக்கு வழங்கவேண்டும் எனறு வலியறுத்தி வருகின்றன.
சென்னை பொருளாதார பள்ளியின் ஆய்வின்படி மத்திய அரசானது ஆண்டுதோறும் ரூ.3 ஆயிரம் கோடி நிதி வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரூ.1,724 கோடி தான் வழங்கப்படுகிறது. இது வருவாயில் 22 சதவீதம் தான். ஆனால் பிற மாநிலங்கள் வருவாயில் 41 சதவீத நிதியை பெறுகின்றன.

ஸ்மார்ட் சிட்டி

நான் முதல்-அமைச்சராக இருந்தபோது பலமுறை தங்களை சந்தித்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவும், மத்திய நிதிக்குழுவில் சேர்த்து நிதி வழங்கவும் வலியுறுத்தினேன். இதுதொடர்பாக பல கடிதங்களையும் பிரதமருக்கு எழுதியுள்ளேன்.
10 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதுவை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் நாராயணசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்