மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்
மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.;
காலாப்பட்டு
மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பட்டமளிப்பு விழா
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் வரவேற்றார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு இளநிலை படிப்பில் 285 பேருக்கும், முதுநிலையில் எம்.சி.ஏ. படிப்பில் 36 பேருக்கும், எம்.டெக். படிப்பில் 206 பேர் என ஒட்டுமொத்தமாக 527 பேருக்கு பட்டங்களை வழங்கினர்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் வாழ்க்கை என்பது போட்டி நிறைந்தது. எனவே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். ஒரு நிமிடத்தை தவறவிட்டால் கூட அதை திரும்பப்பெற முடியாது.
எனவே இருக்கிற நேரத்தில் வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள வேண்டும். நம்மை நாமே அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
திறமைகளை வளர்த்து...
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது. அதே நேரத்தில் 1-ந்தேதியையும் (சம்பளம்) அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். நான் வந்த பிறகு அரசு ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் சரியான நேரத்தில் கிடைக்க 24 மணிநேரமும் உழைத்து வருகிறோம்.
நானும், முதல்-அமைச்சரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மாணவர்கள் பொருளாதார மேம்பாட்டுக்கான திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆண்களும், பெண்களும் தங்களுக்கு சரியான வாய்ப்பு வரும் வரை திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள்.
சிரித்தாலே நோய்கள் வராது
சரியான நேரத்தில் நாம் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவேண்டும். பல நேரங்களில் பெண்கள் சாதனை செய்வதற்காக 30 வயதை கடந்து திருமணம் செய்கிறார்கள். இது மருத்துவ ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்கிவிடும். வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தான்.
தேவையான நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் வாழ்க்கையை அனுபவிப்பார்கள். சிரிப்பதற்காத்தான் இந்த வாழ்க்கை. சிரித்தாலே நோய்கள் வராது.
அலுவலகம் செல்லும் பெண்கள் வீட்டிற்கு வந்ததும் முதலில் ஓடிச்சென்று தங்களது குழந்தைகளை தான் பார்ப்பார்கள். அதே தாய் வயதானவுடன் முடியாமல் கயிற்று கட்டிலில் படுத்திருப்பார். அந்த தாயைப்போன்று நாம் அதே வேகத்தில் நாம் அவரை சென்று பார்ப்பதில்லை.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.