சென்னையில் ரெயில் விபத்து: விசாரணை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைப்பு
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற ரெயில் விபத்தில் சிக்கிய ஓட்டுனர் மீது 3 பிரிவுகளில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற ரெயில் விபத்தில் சிக்கிய ஓட்டுனர் மீது 3 பிரிவுகளில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த தெற்கு ரெயில்வே சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை ரெயில்வே பணிமனையில் இருந்து நேற்று மாலை சுமார் 4.25 மணிக்கு கடற்கரை ரெயில் நிலைய நடைமேடை 1-ல் ‘3 பேஸ்’ மின்சார ரெயில் வந்தது. இந்த நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த ரெயில் நடைமேடை முடிவில் இருந்த 2 கடைகளுக்கு புகுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த விபத்தின்போது ரெயிலை இயக்கிய ரெயில் ஓட்டுனர் பவித்ரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் ரெயில்வே அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரெயில் நிலைய மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ரெயில் எழும்பூர் ரெயில்வே போலீசார் ரெயில் ஓட்டுனர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை தெற்கு ரெயில்வே பாதுகாப்பு பிரிவு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்