மின்சார ரெயில் விபத்து: குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் - தெற்கு ரெயில்வே
சென்னை, மின்சார ரெயில் விபத்து குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த புறநகர் மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளானது. பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதில் ரெயில் பெட்டிகள் சேதம் அடைந்தன.
பணிமனையில் இருந்து சென்ற ரெயில் என்பதால் ரெயிலில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்தில் ரெயிலின் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் ரெயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரெயில் நிலையத்திற்குள் மிகவும் குறைவான வேகத்தில் ரெயில் நுழைந்த போது, ரெயிலில் ஏறுவதற்காக வழக்கம் போல பயணிகள் நடைமேடையில் நின்று கொண்டிக்கின்றனர்.
திடீரென ரெயில் நடைமேடையில் மோதி நின்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அங்கிருந்து பதற்றத்துடன் ஓடிச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் கூறுகையில், இந்த விபத்தில் பயணிகள் யாரும் ரெயிலில் இல்லாததால், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அதேநேரம் நடைமேடையிலும் எந்த பயணியும் இல்லாததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயிலை ஓட்டி வந்த சங்கரும், ரெயிலிலிருந்து கீழே குதித்து விட்டதால், அவரும் காயமின்றி தப்பிவிட்டார். அடுத்தகட்டமாக, இந்த ரெயில் விபத்து எதனால் நடந்தது என்பது குறித்து ஒரு குழு அமைத்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்றார்.