ரெயிலில் கைத்துப்பாக்கியை தவறவிட்ட முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல்...!
ஈரோட்டுக்கு ரெயிலில் வந்தபோது முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தனது கைத்துப்பாக்கியை தவறவிட்டு சென்றார்.
ஈரோடு,
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 6.20 மணிஅளவில் ஈரோட்டுக்கு வந்தடைந்தது. பயணிகள் இறங்கி சென்ற பிறகு ரெயில்வே பணியாளர்கள் பெட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ‘எச்ஏ1’ என்ற குளிர்சாதன பெட்டியில் ஒரு துப்பாக்கி இருந்ததை பார்த்தனர்.
இதுபற்றி அறிந்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டியில் ஏறி சென்று பார்வையிட்டனர். அப்போது துப்பாக்கியை சோதனையிட்டதில் 8 குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த துப்பாக்கியை பாதுகாப்பாக ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
துப்பாக்கி கிடந்த படுக்கையில் முன்பதிவு செய்து பயணித்த பயணியின் விவரத்தை ரெயில்வே அதிகாரிகளிடம் போலீசார் கேட்டறிந்தனர். அப்போது ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஈரோட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்ததும், அவர் ரெயிலில் இருந்து இறங்கியபோது துப்பாக்கியை எடுக்காமல் அங்கேயே தவறவிட்டு சென்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தகவல் கிடைத்து பொன்மாணிக்கவேல் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை 8 மணி அளவில் வந்தார். அவரிடம் 8 குண்டுகளுடன் இருந்த துப்பாக்கியை ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.