தமிழகம் முழுவதும் இடி மின்னலுடன் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்றிரவு நல்ல மழை பெய்தது.

Update: 2022-04-23 02:58 GMT
சென்னை,

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி  7 மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்த நிலையில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, திங்கள்நகர் , குளச்சல் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இரவு முழுவதும் இடி மின்னலுடன் மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்றுவட்டடார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. கும்மாபட்டை, மஹாராஜபுரம், கிருஷ்ணன்கோயில், வணிகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தேனி வாமட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள வடுகபட்டி, காமாட்சிபுரம், மேல்மங்கலம், கல்லிப்பட்டி  பகுதிகளில் 8 நாட்களுக்கு பிறகு மிதமான சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், பிற்பகலுக்கு பின் சாரல் மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழையில் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் கயத்தாறு தேவர்குளம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் நெடுஞ்சாலைத்துறை மரத்தை அகற்றி போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்