வாழ்க்கையில் முன்னேற உடலும், உள்ளமும் நன்றாக இருக்கவேண்டும்

வாழ்க்கையில் முன்னேற உடலும், உள்ளமும் நன்றாக இருக்கவேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Update: 2022-04-22 18:16 GMT
வாழ்க்கையில் முன்னேற உடலும், உள்ளமும் நன்றாக இருக்கவேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புகைப்பட கண்காட்சி
புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் அரவிந்தரின் 150-வது ஆண்டையொட்டி புகைப்பட கண்காட்சி கடற்கரை சாலையில் உள்ள ஆசிரம இல்லத்தில் நடக்கிறது. புகைப்பட கண்காட்சியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர்இன்று மாலை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
புதுச்சேரி, சரித்திரத்தில் மிக முக்கிய இடம் பெற்றுள்ளது. சித்தர்களும், சுதந்திர போராட்ட வீரர்களும், ஆன்மிக வாதிகளும் எல்லோருக்கும் அடைக்கலம் தரக்கூடிய தாயின் மடியாக புதுச்சேரி இருந்துள்ளது. புதுச்சேரி ஒரு சிறந்த மாநிலமாக திகழ வேண்டும் என்பது தான் எனது விருப்பம். கண்காட்சிகளின் தேவை அதிகமாக இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும் நாட்டிற்காக சுதந்திர போராட்ட வீரர்கள் எந்த அளவுக்கு பாடுபட்டார்கள் என்று தெரிந்து கொள்ள உதவும்.
உடலும் உள்ளமும்...
அரவிந்தர் மன அமைதி மற்றும் உடல்பலம் கலந்த யோகாவை பற்றி குறிப்பிடுகிறார். மனம் அமைதியாக இருந்தால் தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் உடலும், உள்ளமும் நன்றாக இருக்க வேண்டும்.
அதற்கான பல கருத்துக்களை அரவிந்தர் சொல்லி இருக்கிறார். புதுச்சேரி மக்கள் அனைவரும் கண்காட்சியை கண்டு பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரலாற்றில் முக்கிய பங்கு
முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
உலகில் எந்த பகுதியில் இருந்து புதுவைக்கு வந்தாலும் அரவிந்தர் ஆசிரமத்திற்கு தான் செல்வார்கள். மகான் என்று எல்லோரையும் கூறிவிட முடியாது. சுதந்திர போராட்ட காலத்தில் வீரர்கள் தங்குமிடமாக புதுச்சேரி இருந்துள்ளது. ஆதனால் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
புதுச்சேரியில் தங்கி பாரதியார் நல்ல நூல்கள், விடுதலை வேட்கை கவிதைகளை கொடுத்துள்ளார். அரவிந்தர் பல ஆன்மிக செய்திகளை தந்துள்ளார். மாணவர்கள், இளைஞர்கள் நமது நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். 
இவ்வாறு அவர் கூறினார்.
சபாநாயகர்
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், கலெக்டர் வல்லவன், செய்தித்துறை இயக்குனர் வினயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 1-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடக்கிறது.

மேலும் செய்திகள்