17 வயது சிறுமியை தாயாக்கிய 12 வயது சிறுவன் - போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சையில், 17 வயது சிறுமியை தாயாக்கிய 12 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்ப்பட்டான். அவனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சையை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர், பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து அவருடைய பெற்றோர் கேட்டபோது, சிறுமி சரியான பதில் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமிக்கு வயிற்றுவலி அதிகமாகி உள்ளது. உடனடியாக அவருடைய பெற்றோர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியை அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகாத நிலையில், சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் டாக்டர்களுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து டாக்டர்கள், தஞ்சை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில், பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வரும் பக்கத்து வீட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும், இதில் தான் கர்ப்பமானதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியின் பெற்றோரிடமும் இதுபற்றி விசாரித்தனர். தனது மகள் கர்ப்பமானது சமீபத்தில் தான் தெரிந்தது. இதுபற்றி தங்களிடம் தெரிவிக்காமல் அவர் மறைத்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர, சிறுவனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசாரிடம், சிறுவனுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் சிறுவனை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.