முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 2½ ஆண்டுகள் சிறை; ராசிபுரம் கோர்ட்டு தீர்ப்பு

விவசாயி தொடர்ந்த வழக்கில் வெண்ணந்தூர் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராசிபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-04-22 05:10 GMT
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் கொழிஞ்சி தோட்டத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் வேலு (வயது 48). விவசாயி. வேலுவின் குடும்பத்திற்கும், அவரது பெரியப்பா மகன் சவுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. 
இதுகுறித்து வேலுவின் தந்தை பழனியப்பன் கடந்த 1991-ம் ஆண்டு ராசிபுரம் முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் 29.6.2001-ல் விவசாயி பழனியப்பனுக்கு சாதகமாக கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இதுதொடர்பாக வேலு, சவுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இவ்வாறு இருக்க சவுந்தர்ராஜன், வேலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். 

இதுகுறித்து அப்போதைய வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுப்பிரமணியம் வேலுவை விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதே நாளில் வேலு ஒரு புகாரை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கொடுப்பதற்காக சென்றார். போலீஸ் நிலையம் சென்ற அவரை சவுந்தர்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வேலு ராசிபுரம் கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் விவசாயி வேலு வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுப்பிரமணியம் தன்னை கைது செய்தபோது தகாத வார்த்தைகளால் திட்டியும், தன்னை அச்சுறுத்தியும், தான் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்து 500-ஐ எடுத்து கொண்டு லத்தியால் தாக்கியதாகவும், எனவே இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனித உரிமை ஆணையம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

5 ஆண்டுகள் ஆகியும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 2013-ம் ஆண்டு வேலு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தனி புகார் அளித்தார். இவருக்காக வக்கீல் சிவகுமார் வாதாடி வந்தார். ஏறக்குறைய 9 ஆண்டுகள் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரெஹனா பேகம் பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

அதில் விவசாயி வேலுவை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக 6 மாதம் சிறை மற்றும் ரூ.500 அபராதமும், ரத்தக்காயம் ஏற்படுத்தியதற்காக 1 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும், அச்சுறுத்தி பணத்தை எடுத்ததற்காக 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

தண்டனை பெற்ற இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றியவர். இவர் வாச்சாத்தி பாலியல் வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை பெற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். மேலும் அந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்