மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டவில்லை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் எந்தவொரு பாகுபாடோ, பாரபட்சமோ காட்டவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2022-04-21 23:12 GMT
சென்னை,

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நியாயமான உதவித்தொகையை நிர்ணயம் செய்ய கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சொற்ப தொகையை உதவித் தொகையாக வழங்குகிறது. இந்த தொகையை வழங்கி மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்துவதற்கு பதில், உதவித் தொகை வழங்குவதை நிறுத்தி விடலாமே? என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த விசயத்தில் சமூக நலத்துறை முதன்மை செயலாளர் போதிய அக்கறையுடன் செயல்படவில்லை.

இதுகுறித்து அவர், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆஜராக வேண்டும்

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பணன் ஆஜராகி, "பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவொரு பாகுபாடோ, பாரபட்சமோ காட்டவில்லை. அவர்களுக்கு நிதியுதவி மட்டுமின்றி அவ்வப்போது நலத்திட்டங்களின் கீழ் நிவாரண உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

21 வகையான மாற்றுத்திறனாளிகளில் 5 வகையினர் வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட முடியாதவர்கள் என்பதால் அவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரமும், மற்ற வகையினருக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி போக்குவரத்து, மருத்துவம், ரேஷன் போன்றவற்றிலும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வழக்கில் சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

உதவ வேண்டும்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அரசுக்கு கேள்வி எழுப்பவில்லை. அவர்களின் அன்றாட அடிப்படை வாழ்வாதாரத்துக்கு அரசு என்ன செய்கிறது? என்பதை அறிய விரும்புகிறோம். இந்த வழக்கில் சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி இந்த ஐகோர்ட்டுக்கு உதவ வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைத்து ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறி விசாரணையை வரும் ஜூன் 8-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்