பாலிடெக்னிக் மாணவர் கத்தியால் குத்திக்கொலை

புதுச்சேரி அருகே குடும்ப தகராறில் பாலிடெக்னிக் மாணவரை தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2022-04-21 18:02 GMT
புதுச்சேரி அருகே குடும்ப தகராறில் பாலிடெக்னிக் மாணவரை தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
2 மனைவிகள்
புதுச்சேரி அருகே வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55). தனியார் கார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி கடலூரிலும், 2-வது மனைவி வீராம்பட்டினத்திலும் வசித்து வருகின்றனர்.
2-வது மனைவி மகன் தினேஷ் (24). இவர் புதுவை பாலிடெக்னிக்கில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கிருஷ்ணமூர்த்தி 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். 2 மனைவிகள் என்பதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் இருந்து வந்தன. 
சரமாரி கத்திக்குத்து
இன்று இரவு 7 மணியளவில் 2-வது மனைவி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அப்போது தினேஷ், ஏன் இப்படி அடிக்கடி வீட்டில் சண்டை போடுகிறாய், நிம்மதியாகவே இருக்க முடியவில்லை என்று கூறி, தந்தை கிருஷ்ணமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், அருகில் இருந்த கத்தியை எடுத்து மகன் தினேசை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து மற்றும் மார்பில் கத்திக்குத்து விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். ஆத்திரத்தில் மகனை கத்தியால் குத்தியதால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தினேசை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தந்தைக்கு வலைவீச்சு
இது தொடர்பாக அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கிருஷ்ணமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர். 
குடும்ப தகராறில் தந்தையே தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்