கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் போலீசார் விசாரணை தொடக்கம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24-4-2017 அன்று காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
மேலும் கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த தனிப்படையினர் எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதனிடையே, கடந்த 15-ந் தேதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டியிடம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் வைத்து 5 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். மறுநாள் அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணன் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கோவை மாவட்ட அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் அனுபவ் ரவியிடம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு டிரைவர் கனகராஜ் பேசியதாக தெரிகிறது. எனவே அவரிடம் கடந்த 18-ந் தேதி 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், கோடநாடு வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்திற்கு சென்ற மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் சசிகலாவிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனிப்படை போலீசார் சசிகலாவிடம் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் தி.நகரில் உள்ள அவரது இல்லம் முன் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.