நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள்

நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

Update: 2022-04-20 22:45 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள்

நடப்பு நிதியாண்டில் நில உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு, தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும். நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சிதிலமடைந்த 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த ஆண்டு மறுகட்டுமானம் செய்யப்படும்.

குடியிருப்பு திட்டப்பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நல்ல முறையில் பேணிக்காத்திட கொண்டுவரப்பட்ட “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டத்தை திறம்பட செயல்படுத்த குடியிருப்போர் நலச்சங்கங்கள் பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்படும்.

3 மாத பராமரிப்பு தொகை

குடியிருப்புதாரர்கள் உடனடியாக பராமரிப்பு கட்டணம் செலுத்துவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் 3 மாத பராமரிப்புத்தொகை அரசு பங்களிப்பு நிதியில் இருந்து முன்பணமாக செலுத்தப்படும்.

அடுக்குமாடி குடியிருப்பு திட்டப் பகுதிகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பு பணியினை திறம்பட செயல்படுத்திட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தனி பராமரிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.

ரூ.100 கோடியில் புனரமைப்பு பணி

சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 40 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு

மேலும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடிசை மாற்று வாரியத்தை பாழ்படுத்திவிட்டனர் என்றும், அப்போது 1.55 லட்சம் வீடுகள் கட்டியதாக அந்த துறையின் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது உண்மைக்கு மாறானது என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் செங்கல்பட்டு, மதுரை, திருச்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொழிற்பேட்டைகளுக்கு நிலம் எடுக்கும் பணி முடியும் நிலையில் உள்ளதாகவும், இந்த ஆண்டுக்குள் தொழில் முனைவோருக்கு மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்