திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-20 22:41 GMT
பெரம்பூர்,

சென்னை கொருக்குபேட்டை, பாரதி நகர், 6-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். தனியார் வங்கி ஊழியர். இவருடைய மனைவி சத்ய பிரியா (வயது 25). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவீட்டு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சத்யபிரியா வேலை செய்து வந்தார்.

திருமணத்துக்கு பிறகு வேலைக்கு செல்ல வேண்டாம் என கணவர் கூறியதால் கடந்த 7-ந்தேதி முதல் சத்யபிரியா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் ராஜ்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டாலும் சத்ய பிரியா போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு சத்யா பிரியா, படுக்கை அறையில் தனது புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் சத்யபிரியாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மற்றொரு சம்பவம்

திருவேற்காடு, கனக துர்கா நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் ஹரிபாபு (24). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜெயந்தி (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் தனது அறையில் ஜெயந்தி, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கடந்த சில தினங்களாக ஜெயந்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஜெயந்திக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்