கவர்னர் பாதுகாப்பு வாகனங்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் பா.ஜ.க. அரசியல் செய்யவில்லை

கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில், பா.ஜ.க. அரசியல் செய்யவில்லை என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

Update: 2022-04-20 21:43 GMT
சென்னை,

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், `பாரத பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா-2022' என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புத்தகத்தை வெளியிட, திரைப்பட இயக்குனரும், நடிகருமான கே.பாக்கியராஜ், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.செல்வராஜ், நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ஜி.ராம்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சரித்திரத்தை மாற்றும்

விழாவில் அண்ணாமலை பேசியதாவது:-

இந்த புத்தகத்தில், பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள அனைத்து திட்டங்களும் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனிமேல், தமிழக பா.ஜ.க. சார்பில் விடப்படும் அறிக்கைகளில், திட்டங்களின் பெயர்கள் தமிழிலேயே இடம் பெறும்.

அனைத்து தரப்பினருக்கும் பயன் உள்ள இந்த புத்தகம் மக்களை சென்றடைந்தால், தமிழக பா.ஜ.க.வின் அரசியல் சரித்திரத்தை மாற்றக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏற்றுக் கொள்ளும்படி இல்லை

அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-

கவர்னரின் பாதுகாப்பு வாகனத்தில் கொடிகள் வீசப்பட்டனவா? இல்லையா? என்பது குறித்து எனது டுவிட்டர் பதிவில் நான் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தால் தெரியும். போராட்டக்காரர்களை கவர்னர் பயணித்த சாலையோரம் காவல்துறை அனுமதித்ததே தவறு. இதுகுறித்து காவல் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்து ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.

உள்துறை மந்திரியிடம் மனு

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதிக்கும், எங்களுக்கும் எவ்வளவு சித்தாந்த வேறுபாடு இருந்தாலும், இதுபோன்ற விஷயங்களில் அவர் சமரசம் ஆனது இல்லை. இந்த விவகாரத்தில் அரசியல் பண்ணுவது முதல்-அமைச்சரே தவிர, பா.ஜ.க. கிடையாது.

வருகிற 24-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகிறார். அப்போது, கவர்னரின் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்த மனு அளிக்கப்படும்.

நாங்கள் சினிமா துறையினருக்கு தொந்தரவு கொடுப்பது இல்லை. எனவே, அவர்கள் எங்களுக்காக கருத்து கூறுகிறார்கள். திரைத்துறையை தி.மு.க. தலைவர்கள் நசுக்கிக்கொண்டு இருக்கிறார்கள். பாக்கியராஜ், அவரது கருத்தை நேரடியாக பேசக்கூடிய மனிதர். அவரை நான் பிரதமர் மோடியின் ஆதரவாளராக பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில், தமிழக பா.ஜ.க. அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் காயத்ரிதேவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்