கவர்னரின் கார் மீது கருப்புக்கொடி வீசியது ஏற்புடையது அல்ல - திருமாவளவன்
கவர்னரின் கார் மீது கருப்புக்கொடி வீசியது ஏற்புடையது அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னை,
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க இன்று மயிலாடுதுறைக்கு சென்றார்.
அப்போது மன்னம்பந்தல் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர்களை கடந்து கவர்னர் சென்று விட்ட நிலையில், பாதுகாப்பாகச் சென்ற வாகனங்கள் மீது கொடிகள் மற்றும் கம்புகளை வீசி எறிந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவர்னர் கார் மீது கருப்புக் கொடி, கல்வீசப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னரின் கார் மீது கருப்புக்கொடி வீசியது ஏற்புடையது அல்ல. அறவழிப்போராட்டத்தில் இது போன்ற செயல்கள் வரவேற்புடையதல்ல.
கவர்னரின் பாதுகாப்பிற்கு சென்றவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது. இதற்காக முதல்-அமைச்சர் பதவிவிலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என அண்ணாமலை கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கோரிக்கை என்று கூறினார்.