தொழில்துறை 'தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை' என பெயர் மாற்றம் - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

தொழில்துறை 'தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை' என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Update: 2022-04-19 10:22 GMT
சென்னை,

சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே இலக்கு. முதலீட்டு ஊக்குவிப்பு, எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும். தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்து வருகிறது. 

விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும். Greenfield Airport-க்கு இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. சென்னையில்  எந்த இடத்தில் Greenfield Airport அமைய உள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

ஏற்றுமதியில் ஏற்றத்திற்கான தனி கொள்கையை உருவாக்கியது திமுக அரசு. விவசாயிகளின் தோழனாக திமுக அரசு எப்போதும் இருக்கும். தென் கிழக்கு ஆசியாவில் தொழிலுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்.

பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், பொருட்களுக்கு மதிப்பு கூட்டல் பணியை செய்தால், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். அதற்கான கையேட்டினை மாநில திட்டக்குழு உருவாக்கி உள்ளது.

ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் பெரியளவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ஹைட்ரஜன் எரிசக்திக் கொள்கை வெளியிடப்படும். சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்த எத்தனால் கொள்கை 2022 வெளியிடப்படும்.

தேனி - கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு செல்வதில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என்ற முதல்-அமைச்சரின் எண்ணத்துக்கு தொழிற்துறை உதவியாக இருந்தது.

கிருஷ்ணகிரியில் புதிய சிப்காட் தொழிற் பூங்கா ரூ.1,800 கோடி மதிப்பில் 3,000 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்படும். தஞ்சாவூர், உதகமண்டலத்தில் சுமார் ரூ.70 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் தொழிலக வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் பல்துறை தொழிற்பூங்கா, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் அதிவேக ரயில் வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு சுமார் ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

வான்வெளி பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம் ரூ.500 கோடி மதிப்பில் கோவையில் அமைக்கப்படும். கோவையில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்