வனத்துக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபரை துரத்திய காட்டு யானை - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வைரல்

கேரளா-கர்நாடகா செல்லும் சாலையோர வனத்துக்குள் அத்துமீறிய வாலிபர்களை காட்டு யானை விரட்டிய நிலையில் மயிரிழையில் உயிர் தப்பும் வீடியோ காட்சியை சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2022-04-19 08:20 GMT
கூடலூர்:

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கேரளாவின் முத்தங்கா சரணாலயம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகியவை 3 மாநிலங்களை இணைக்கும் வனமாக உள்ளது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலை, கூடலூர் வழியாக ஊட்டி மற்றும் மைசூரு சென்று திரும்புகின்றனர்.

இந்நிலையில் நேற்று கேரளாவை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ஒரு காரில் மைசூர் சென்று விட்டு சுல்தான்பத்தேரி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது முத்தங்கா சரணாலய சாலையோரம் காரை நிறுத்திவிட்டு வனப் பகுதிக்குள் அத்துமீறி சென்று புகைப்படங்கள் எடுத்தனர்.

இந்த சமயத்தில் புதர்களுக்குள் மறைந்திருந்த ஒரு காட்டு யானை வாலிபர்களின் காரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட அவர்கள் உடனடியாக காருக்குள் ஏறி அமர்ந்தனர். ஆனால் மற்றொருவர் வனப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். இருப்பினும் காட்டு யானை முன்னேறியவாறு வந்து கொண்டிருந்ததால் காரை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றனர்.

ஆனால் அவர்களை காட்டு யானை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து வனப்பகுதியில் சென்ற வாலிபரை விரட்டத் தொடங்கியது. நெஞ்சம் பதபதைக்க வைக்கும் இந்த காட்சியை அந்த வழியாக வந்த பிற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். 
இதனிடையே காட்டு யானையிடம் அதிர்ஷ்டவசமாக சிக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் தான் வந்த காரை நோக்கி ஓடினார். மேலும் யானையின் தொடர்ந்து ஓடி வந்தது. பின்னர் அந்த வாலிபர் காருக்குள் ஏற முயன்றார்.

அதற்குள் கால் இடறி கீழே விழுந்தார். இந்தக் காட்சியைக் கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் நெஞ்சம் பதைபதைத்தது. தொடர்ந்து ஒரு வழியாக கீழே விழுந்த வாலிபர் கார் கதவைத் திறந்து அவரை உள்ளே ஏறி அமர்ந்தார். மேலும் காரையும் அங்கிருந்து வாலிபர்கள் ஓட்டிச் சென்றனர். பின்னர் காட்டுயானையும் அங்கிருந்து சென்றது. 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே முத்தங்கா வனத்துறையினர் வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்த வாலிபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்