அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை ஏன் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் அதிகாரிகள் மீது தீவிர குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2022-04-18 22:08 GMT
சென்னை,

மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள காலியிடங்களை அவர்களே நிரப்பிக்கொள்ள 2020-21-ம் கல்வியாண்டில் அனுமதி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த சம்பவத்தில் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு உத்தரவிட்டது.

இதன்படி போலீசார் விசாரணை நடத்தி, ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், இந்த முறைகேடுகளுக்கு காரணம் அப்போதைய மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் செயலாளர் செல்வராஜன் தான் என்று கூறப்பட்டது. இதையடுத்து, ஓய்வுபெற்ற செல்வராஜனின் ஓய்வூதிய பலன்களை நிறுத்திவைக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மேல்முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செல்வராஜன் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செல்வராஜன் தரப்பில், “கொரோனா காலகட்டத்தில் நடத்தப்பட்ட 2 கலந்தாய்வுகளில் காலியிடங்கள் நிரம்பவில்லை. அதனால், தகுதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த முடிவு தனிப்பட்ட முறையில் மனுதாரரால் எடுக்கப்படவில்லை” என்று வாதிடப்பட்டது.

கல்லூரிகளுக்கு சாதகம்

அதற்கு நீதிபதிகள், “மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்திய தேர்வு குழு, தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தாதது ஏன்? இதில் தேர்வுக்குழு செயலாளரின் நடத்தை தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக உள்ளது” என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர், பணிக்காலம் முடிந்து பணி நீட்டிப்பு வழங்கப்படாத நிலையில், செயலாளர் பதவியில் அவரே தொடர்ந்து நீடித்துள்ளார். இதில் அரசு உயர் அதிகாரிகளின் பங்கு என்ன? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இந்த தீவிர குற்றச்சாட்டு குறித்த இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.

விளக்கம்

இதைத்தொடர்ந்து, “ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்குப்பிறகு தான் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனரா? என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்