கஞ்சா விற்பனை குறித்த தகவல்களை கசிய விடும் போலீசார் மீது நடவடிக்கை

கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை பற்றி பொதுமக்களிடம் இருந்து வரும் ரகசிய தகவல்களை வெளியில் கசிய விடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-04-18 21:18 GMT
சென்னை,

போக்குவரத்து விதிமுறைகளை விளக்கும் வகையில் பாதுகாப்பான சாலை என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்ய சென்னை போக்கு வரத்து போலீசார் திட்டமிட் டுள்ளனர். தோழன் என்ற அமைப்புடன் சென்னையில் 100 பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு பிரசார முகாமை நடத்த உள்ளனர்.

இதன் தொடக்கவிழா சென்னை சேத்துப்பட்டு, கிறிஸ்தவ பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழிப்புணர்வு முகாமை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி வைத்தார்.

விழா முடிந்தவுடன் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

100 பள்ளிகளில் நடத்தப்படும் இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியில் 25 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்வார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் மற்றும் ரெயில்களில் அராஜகத்தில் ஈடுபட்டால், முதலில் பள்ளி-கல்லூரி நிர்வாகத்தினர், பெற்றோர்களை அழைத்து அறிவுரைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஆனால் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிப்பவர்களின் ரகசியம் காப்பாற்றப்படும். அந்த ரகசியம் கசிந்தால், உரிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க சிறப்பு தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மாணவர்கள் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து வாகனங்களை ஓட்டினால், சம்பந்தப்பட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணாமலை மீது நடவடிக்கை பாயுமா?

பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆடியோ குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை. புகார் வந்தால் சட்ட ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.

பேட்டியின்போது கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி.சரத்கர், இணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்