கொரோனா இறப்புக்கு நிவாரணம் பெற 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

மார்ச் 20-ந்தேதிக்கு முன் நிகழ்ந்த கொரோனா இறப்புக்கு நிவாரணம் பெற 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-18 17:02 GMT
மார்ச் 20-ந்தேதிக்கு முன் நிகழ்ந்த கொரோனா இறப்புக்கு நிவாரணம் பெற 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
புதுவை கலெக்டர் வல்லவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கருணைத் தொகை
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொரோனா தொற்று காரணமாக குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் கருணைத்தொகை அளிக்கப்படுகிறது. 
இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் 1,896 பேருக்கு கருணைத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் கொரோனா இறப்பு தொடர்பாக கருணைத்தொகை பெற தகுதியுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்து பயனடைந்து இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. 
ஆகவே சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 24-ந்தேதி வெளியிட்ட ஆணையில் கொரோனா இறப்பு தொடர்பாக தவறான முறையில் பயன்பெறுவதை தடுப்பதற்காக காலத்தை வரையறுத்துள்ளது.
சட்டப்படி தண்டனை
அதன் அடிப்படையில் கடந்த (மார்ச்) மாதம் 20-ந்தேதிக்கு முன்பு நிகழ்ந்த இறப்பு தொடர்பாக 24.3.2022-ல் இருந்து 60 நாட்களுக்குள் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 
இனிவரும் காலங்களில் கொரோனா தொடர்பான கருணைத்தொகை பெற விரும்புபவர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும். வரையறை செய்யப்பட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க இயலாதவர்கள், குறைதீர்ப்பு குழுவின் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம். 
பொதுமக்கள் சுப்ரீம் கோட்டின் இந்த ஆணையை கருத்தில்கொண்டு கொரோனா இறப்பு தொடர்பாக பயன்பெற விரும்புவோர், மேற்கூறிய காலவரையறையை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தவறான முறையில் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்து நிவாரணம் பெற முற்படுபவர்கள் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்