நாங்குநேரி: கணவன், மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

நாங்குநேரி அருகே கணவன், மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-04-18 13:33 GMT
நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம் சிவன் காலனியை சேர்ந்தவர் செல்லையா (வயது 65), விவசாயி. இவருடைய மனைவி பேச்சித்தாய் (வயது 55).

இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஆறுமுகராஜா (வயது 35). இவரது வீட்டுக்கும், செல்லையா வீட்டுக்கும் இடையே உள்ள இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஊரில் நடந்த கோவில் கொடை விழாவுக்கு செல்லையா மகள் செண்டு, பட்டர்புரத்துக்கு வந்திருந்தார். ஏப்ரல் மாதம் 25-ந்தேதி இரவு, பக்கத்து வீட்டை சேர்ந்த ஆறுமுகராஜா ரோட்டில் நின்று ரகளை செய்து கொண்டிருந்தார்.

இதைக்கண்ட செண்டு, ஆறுமுகராஜாவை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகராஜா அரிவாளால் செண்டுவை வெட்டினார். இதைக்கண்ட தாய், தந்தை இருவரும் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் 2 பேரையும் ஆறுமுகராஜா சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு செல்லையா, பேச்சித்தாய் இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி தீபா வழக்கை விசாரித்து ஆறுமுகராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

மேலும் செண்டுவை வெட்டிய குற்றத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், இந்த தண்டனையை அனுபவித்த பிறகு இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீப்பு வழங்கினார். இதுதவிர ரூ.5,100 அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் துரை முத்துராஜ் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்