கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு ஏன்? - சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழ்புத்தாண்டையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது.
சென்னை,
தமிழ்புத்தாண்டையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.
தி.மு.க. கூட்டணி கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை. கவர்னரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், கவர்னரின் தேநீர் விருந்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக கவர்னர் மாளிகையில் கவனிப்பாரன்றி முடங்கிக்கிடக்கின்றது. நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்கும்போது, தேநீர் விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்?. நீட் விலக்கு மசோதாவை முடக்குவது தமிழக மக்களை அவமதிப்பதாகும்.
நூற்றாண்டு கண்ட சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னர் மாளிகையில் முடங்கி கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நலன் கிடைக்கிறது என்றால் நான் வலியையும், அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.
கவர்னர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. தனிப்பட்ட முறையில் கவர்னருக்கும், எனக்கும் சுமூக உறவு இருக்கிறது. நான் ஆட்சி நடத்தும் விதத்தை பொதுமேடையிலேயே அவர் பாராட்டி பேசியிருக்கிறார். கவர்னருக்கு உண்டான மரியாதையை தொடர்ந்து வழங்குவோம்.
நீட் விலக்கு மசோதா கிடப்பில் கிடப்பது குறித்து விவாதிக்க தேவைப்பட்டால் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும். நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னர் முடிவு எடுத்திருப்பதாக ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.