வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்
மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின்படி, ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன், 14-ந் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில் மீன்களை பிடித்தால், மீன்களின் வயிற்றில் உள்ள சினை (முட்டை) அழிக்கப்பட்டு விடும். எனவே மத்திய மாநில அரசுகள் இந்த 61 நாட்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது.
இதையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி முதல் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆழ்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம், உப்பளம் பழைய துறைமுகம் மற்றும் கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்க்கும் பணியை தொடங்கியுள்ளனர். முதற் கட்டமாக படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிழிந்த வலைகளை தைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.