லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேர் கைது
செல்போன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று வழுதாவூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மதுக்கடை அருகில் 2 வாலிபர்கள் நின்று கொண்டு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை செல்போன் மூலம் விற்பனை செய்து கொண்டு இருந்தனர். போலீசாரை கண்ட உடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 22), கதிர்காமம் தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்த தணிகாசலம் (49) என்பதும், லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2,400 மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.