நாகர்கோவிலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 72 பவுன் நகை திருட்டு - வேலைக்கார பெண்களிடம் விசாரணை
நாகர்கோவிலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 72 பவுன் நகை திருடு போனது தொடர்பாக வேலைக்கார பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு முதல் புதுத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 70), ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உண்டு. ஆனந்தனின் மனைவியிடம் 250 பவுன் நகை உள்ளது. அவர் நகைகளை விஷேச நாட்களில் மட்டுமே அணிவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக தீபாவளி பண்டிகையன்று நகை அணிந்துள்ளார். பின்னர் நகையை வீட்டில் உள்ள பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி சித்திரை விஷூ பண்டிகை கொண்டாடுவதற்காக நகையை எடுத்துள்ளார். அப்போது நகை 72 பவுன் நகை மாயமாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு முழுவதும் நகையை தேடியும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து சம்பவம் பற்றி நேற்று நேசமணிநகர் போலீசுக்கு ஆனந்தன் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஆனந்தனிடம் விவரங்களை கேட்டறிந்த போலீசார் வீடு முழுவதும் ஆய்வு செய்தார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்யப்பட்டன.
ஆனால் வீட்டுக்குள் மர்ம நபர்கள் வந்து சென்றதற்கான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. கதவில் இருந்த பூட்டுக்கும், பீரோவில் பூட்டுக்கும் எந்த சேதமும் இல்லாமல் லாவகமாக நகை மட்டும் திருடப்பட்டு இருந்தது. அப்படியெனில் திருடன் வெளியில் இருந்து வரவில்லை. வீட்டுக்குள்ளேயே தான் இருக்கிறான் என்பதை உறுதி செய்த போலீசார் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக வீட்டில் வேலை பார்த்த 2 வேலைக்கார பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆனந்தனின் மகள்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நாகர்கோவிலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 72 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.