சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம்
41 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம் கிடைத்தது பெருமையாக உள்ளது என சாபாநாயகர் செல்வம் கூறியுள்ளார்
காரைக்கால் ஆயிர வைசியர் மஞ்சப்புத்தூர் சங்கத்தின் சார்பில், நேற்று நடந்த வள்ளலார் ஆராதனை விழாவில் புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். முன்னதாக அரசு விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மக்களுக்கான அனைத்து தேவைகளையும், பிரதமர் நரேந்திர மோடியின் ஒத்துழைப்போடு மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. அசாமில் 3 நாட்கள் சபாநாயகர்கள் மாநாடு நடந்தது. அதில் புதுச்சேரி சார்பில் கலந்து கொண்டு புதுச்சேரி மாநில இளஞர்களுக்கான வேலை வாய்ப்பு, அரசியல் ஈடுபாடு குறித்து எனது கருத்துக்களை பதிவு செய்தேன். எனது கருத்துக்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார்.
புதுச்சேரி சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம் பெறப்பட்டுள்ளது. இனி நிதி குறித்த கோப்புகள் தலைமை செயலருக்கோ, நிதித்துறை செயலருக்கோ அனுப்பப்படாது. கடந்த 41 ஆண்டுகளாக இதுவரை பின்பற்றப்படாத புது நடைமுறையாக இந்த அதிகாரம் பெறப்பட்டுள்ளது. இதை புதுச்சேரி மக்களுக்கான வரப்பிரசாதமாக கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.